மு.வரதராசன் விளக்கம்
புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து,உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப் பிடிக்க வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
மிகச் செய்து தம் எள்ளுவாரை - பகைமை தோன்றாமல் புறத்தின்கண் நட்பினை மிகச்செய்து அகத்தின்கண் தம்மை இகழும் பகைவரை; நட்பினுள் நகச் செய்து சாப்புல்லற்பாற்று - தாமும் அந்நட்பின் கண்ணே நின்று புறத்தின்கண் அவர் மகிழும் வண்ணம் செய்து அகத்தின்கண் அது சாம்வண்ணம் பொருந்தற்பான்மை உடைத்து, அரச நீதி. ('நின்று' என்பதூஉம், 'அரசநீதி' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. அகனொன்று புறனொன்றாதல் ஒருவர்க்குத் தகாது எனினும், பகைவர் மாட்டாயின் தகும் என்பது நீதிநூல் துணிபு என்பார். அதன்மேல் வைத்துக் கூறினார். 'சாவ' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. 'கோட்டின்வாய்ச் சாக்குத்தி' (கலித். முல்லை.5)என்புழிப்போல. 'எள்ளுவாரைப் புல்லல்' எனக் கூட்டுக.)
சாலமன் பாப்பையா விளக்கம்
வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.