குறள் 830:
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
When time shall come that foes as friends appear, Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear
அதிகாரம் - 83 - கூடாநட்பு
மு.வரதராசன் விளக்கம்
பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் அந்த நட்பையும் விட்டு விட வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் ஒரீஇ விடல் - தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க. (அக்காலமாவது, தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத அளவு. இதனானே, ஆமளவெல்லாம் நீக்குக என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் அந்நட்பினை ஒழுகுமாறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.