மு.வரதராசன் விளக்கம்
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்களின், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்: அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம். '(தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார். 'ஒடுங்கும்' என்றார். பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும், அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தெளியற்க'' என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.