மு.வரதராசன் விளக்கம்
வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பகைவரிடம் காணப்படும் சொல்வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது.
பரிமேலழகர் விளக்கம்
வில்வணக்கம் தீங்கு குறித்தமையான் - வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால்; ஒன்னார் கண் சொல் வணக்கம் கொள்ளற்க - பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க. '(தம் வணக்கம் அன்று என்பது தோன்றச் 'சொல்வணக்கம்' என்றும் வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமைபற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார். வில்லினது குறிப்பு அவனினாய வில்வணக்கத்தின்மேல் நிற்றலான். ஒன்னாரது குறிப்பும் அவரினாய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று. இதுவும் தீங்கு குறித்த வணக்கம் என்றே கொண்டு அஞ்சிக் காக்க என்பதாம். இவை மூன்று பாட்டானும் 'அவரைச் சொல்லால் தெளியற்க' என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.