மு.வரதராசன் விளக்கம்
.( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள், பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படிச் செய்து விட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல.
பரிமேலழகர் விளக்கம்
போற்றின் அரியவை போற்றல் - அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க; கடுத்த பின் தேற்றுதல் யார்க்கும் அரிது - அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான். (அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வௌவல் என்றிவை முதலாயின. அவற்றைக் காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றான் தெளிவித்தாலும் கடன்கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் யார்க்கும் அரிதென்றார். இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம்.