பொருட்பால் · குறள் 694 / 1330
70. மன்னரைச் சேர்ந்தொழுதல்

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்ஆன்ற பெரியா ரகத்து.

In the presence of the great avoid whispering and smiling.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து,அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

ஆன்ற பெரியாரகத்து - அமைந்த அரசர் அருகு இருந்தால்; செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவன் செவிக்கண் சொல்லுதலையும் ஒருவன் முகம் நோக்கி நகுதலையும் தவிர்த்து ஒழுகுக. (சேர்தல்: பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தம் குற்றம் கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது கருத்து.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.

— சாலமன் பாப்பையா