மு.வரதராசன் விளக்கம்
அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தல் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
மன்னர் விழைப விழையாமை - தம்மால் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும். (ஈண்டு 'விழைப' என்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மை என்றிவை முதலாயின. இவற்றை ஒப்பிற்கு அஞ்சித் தாம் விழையா தொழியவே, அவ்வச்சம் நோக்கி உவந்து,அவர்தாமே எல்லாச் செல்வமும் நல்குவார் என்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பின் கேடு தரும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.