மு.வரதராசன் விளக்கம்
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
இகல் வேந்தர்ச் சோந்து ஒழுகுவார் - மாறுபடுதலையுடைய அரசரைச் சோந்தொழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க.கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல்வேந்தர்' என்றார், மிக அகலின் பயன் கொடாது, மிகஅணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.