பொருட்பால் · குறள் 603 / 1330
61. மடியின்மை

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியும் தன்னினும் முந்து.

The family of the fool who hugs sloth in his own lap fades away before him.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் - அவன் தன்னினும் முந்துற அழியும். (அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் 'பேதை' என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும்' என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.

— சாலமன் பாப்பையா