மு.வரதராசன் விளக்கம்
நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடி மக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் - குடிகளான் 'நம் இறைவன் கடியன்' என்று சொல்லப்படும் இன்னாத சொல்லையுடைய வேந்தன், உறை கடுகி ஒல்லைக்கெடும் - ஆயுளும் குறைந்து செல்வமும் கடிதின் இழக்கும். (நெஞ்சு நொந்து சொல்லுதலான், இன்னாமை பயப்பதாய சொல்லை 'இன்னாச் சொல்' என்றார். 'உறை' என்பது முதனிலைத் தொழிற் பெயர். அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாள்மேல் நின்றது. அது குறைதலாவது, அச்சொல் இல்லாதார்க்கு உள்ளதிற் சுருங்குதல்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.