குறள் 540:

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.

'Tis easy what thou hast in mind to gain, If what thou hast in mind thy mind retain
அதிகாரம் - 54 - பொச்சாவாமை
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
தான் உள்ளியது எய்தல் எளிது மன் - அரசனுக்குத் தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம், மற்றும் உள்ளியது உள்ளப் பெறின் - பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின். (அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது: மறவி இன்றி அதன்கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.
சாலமன் பாப்பையா விளக்கம்
நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.