மு.வரதராசன் விளக்கம்
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.
பரிமேலழகர் விளக்கம்
ஓர்ந்து - தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி: யார்மாட்டும் கண்ணோடாது, இறை புரிந்து - நடுவு நிலைமையைப் பொருந்தி, தேர்ந்து - அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து, செய்வஃதே முறை - அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம். (நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை இறை என்றும் உயிரினும் சிறந்தார் கண்ணும் என்பார் 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை 'இறை' எனவும் , செய்வது 'செய்வஃது' எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.