மு.வரதராசன் விளக்கம்
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து - அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது, இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக - முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க. (காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் தம் மகிழ்ச்சியின் என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும் கூறினார். கெட்டாரை உளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து. எண்ணுக என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.