மு.வரதராசன் விளக்கம்
சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.
பரிமேலழகர் விளக்கம்
புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் - நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க, செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மை இல்லை ஆகலான். (அச்செயல்களாவன: மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள். சாதி தருமமாகிய இவற்றின் வழீஇயோர்க்கும் உள்ளது நிரயத் துன்பமே ஆகலின், 'எழுமையும் இல்' என்றார். 'எழுமை' ஆகு பெயர், இதனான் பொச்சாவாது செய்ய வேண்டுவன கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.