மு.வரதராசன் விளக்கம்
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.
பரிமேலழகர் விளக்கம்
விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின், அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும். (உட்பகையின் நீக்குதற்கு 'விருப்புஅறாச் சுற்றம்' என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு அருப்பு அறா ஆக்கம் என்றும், விசேடித்தார். தொடை நோக்கி விகார மாயிற்று. 'இயையின்' என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர். பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேல் கிளைக்கும் என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.