மு.வரதராசன் விளக்கம்
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.
பரிமேலழகர் விளக்கம்
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதாவன் வாழ்க்கை, குளவளாக் கோடுஇன்றி நீர் நிறைந்தற்று -குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற்போலும். (சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சுக் கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவது ஆகலின், 'அளவளாவு' என்பது ஆகுபெயர்.'வாழ்க்கை' என்றதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை. 'நிறைதல்' என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றம் இல்லாதான்செல்வங்கள் தாங்குவார் இன்மையின் புறத்துப் போம் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.