மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள், சுற்றத்தார்கண்ணே உள - சுற்றத்தார்மாட்டே உள ஆவன. (சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. பழைமை : பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின்,ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.