மு.வரதராசன் விளக்கம்
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்ட பின் அவரைச் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்.
பரிமேலழகர் விளக்கம்
தேரான் தெளிவும் - அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும், தெளிந்தான்கண் ஐயுறவும் - ஆராய்ந்து தெளிந்தவன் மாட்டு ஐயப்படுதலும், இவ்விரண்டும், தீராஇடும்பை தரும் - அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். (வினை வைத்த பின் ஒரு தவறு காணாது வைத்து ஐயுறுமாயின், அதனை அவன் அறிந்து, 'இனி இது நில்லாது' என்னும் கருத்தான் அவ்வினையை நெகிழ்த்துவிடும், அதுவேயன்றிப் பகைவரால் எளிதில் பிரிக்கவும் படும். ஆதலால் தெளிந்தான்கண் ஐயுறவும் ஆகாதாயிற்று. தெளிவிற்கு எல்லை கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும், தெளியப்படாதார்இவர் என்பதூஉம், அவரைத் தெளிந்தால் படும் இழுக்கும், தெளிவிற்கு எல்லையும் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.