குறள் 509:
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
Trust no man whom you have not fully tried, When tested, in his prudence proved confide
அதிகாரம் - 51 - தெரிந்துதெளிதல்
மு.வரதராசன் விளக்கம்
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக் கூடாது.
பரிமேலழகர் விளக்கம்
யாரையும் தேராது தேறற்க - யாவரையும் ஆராயாது தெளியா தொழிக, தேர்ந்த பின்தேறும் பொருள் தேறுக - ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக. ('தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டு , 'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை. 'பொருள்' ஆகுபெயர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.