பொருட்பால் · குறள் 449 / 1330
45. பெரியாரைத் துணைக்கோடல்

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.

Is there profit without capital? Is there security for the monarch devoid of wise counselors?

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

முதல் இலார்க்கு ஊதியம் இல்லை - முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம், மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை. (முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெறவேண்டும் என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.

— சாலமன் பாப்பையா