மு.வரதராசன் விளக்கம்
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
பல்லார் பகை கொள்ளலின் பத்து அடுத்த தீமைத்து - தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து; நல்லார் தொடர் கைவிடல் - அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல். (பலர் பகை ஆயக்கால் 'மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் , பேது செய்து பிளந்திடல்' (சீவக. விமலை.32) என்பவையல்லது, ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும். நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்றுபாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.