பொருட்பால் · குறள் 448 / 1330
45. பெரியாரைத் துணைக்கோடல்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்.

The King who is not guarded by men of firm counsel will perish even though he has no enemies.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன், கெடுப்பார்இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும். ('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கொடுப்பார் உளராவர் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

— சாலமன் பாப்பையா