மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு,அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவினை அஞ்சித் துவரக் கெடுக்க வல்லன் ஆயின், தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் - அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம். (கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை. 'வினை' சாதி யொருமை. தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறுஅறஞ்செய்ய வேண்டா, செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.