குறள் 366:
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
Desire each soul beguiles; True virtue dreads its wiles
அதிகாரம் - 37 - அவாவறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
ஒருவனை வஞ்சிப்பது அவா - மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை மறவி வழியால் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே விழித்துக் கெடுக்கவல்லது அவா, அஞ்சுவதே அறன் - ஆகலான், அவ்வவாவை அஞ்சிக் காப்பதே துறவறமாவது. (ஓரும் என்பன அசைநிலை, அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மை வேண்டலை ஒழிந்து பராக்கால் காவானாயின் , அஃது இடமாக அவன் அறியாமல் புகுந்து பழைய இயற்கையாய் நின்று, பிறப்பினை உண்டாக்குதலான்.அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது வாய்மைவேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம்என்பதூஉம் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.