குறள் 365:

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

Men freed from bonds of strong desire are free; None other share such perfect liberty
அதிகாரம் - 37 - அவாவறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர்,தூய துறவியாக மாட்டார்.
பரிமேலழகர் விளக்கம்
அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவியற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவர்கள், மற்றையார் அற்றாக அற்றது இலர் - பிற ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி அற்றிலர். (இதனால் அவா அறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானும் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.