மு.வரதராசன் விளக்கம்
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால்,அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் - அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை, அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும் - ஒருவற்குப் பிற காரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும். (உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்னே செய்து கொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றது இதுபொழுது அவாவால் செய்துகொள்வனவற்றை. 'தவாஅது மேன்மேல் வரும்' என்றதனான், மூவகைத் துன்பங்களும் என்பது பெற்றாம். இதனான் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.