அறத்துப்பால் · குறள் 31 / 1330
4. அறன்வலியுறுத்தல்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு.

Is there anything higher in life than Dharma? It secures glory and wealth.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

சிறப்பு ஈனும் - வீடுபேற்றையும் தரும்; செல்வமும் ஈனும் - துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது? (எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம் : மேன் மேல் உயர்தல், ஈண்டு 'உயிர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது.

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?

— சாலமன் பாப்பையா