அறத்துப்பால் · குறள் 145 / 1330
15. பிறனில் விழையாமை

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி.

He who invades (easily) the house of another thinking it a mere trifie will incur eternal infamy.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

எளிது என இல் இறப்பான் - 'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான், விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும். (இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.

— சாலமன் பாப்பையா