மு.வரதராசன் விளக்கம்
தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.
பரிமேலழகர் விளக்கம்
எனைத்துணையர் ஆயினும் என்னாம் - எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும், தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகழ் - காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல். (இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி, 'என்னாம்' என்றார். 'என் நீர் அறியாதீர் போல இவை கூறின் நின் நீர அல்ல நெடுந்தகாய்' (கலித்.பாலை 6) உயர்த்தற்கண் பன்மை ஒருமை மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் 'தம்மை ஐயுறாத பிறன்' என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?