காமத்துப்பால் · குறள் 1277 / 1330
128. குறிப்பறிவுறுத்தல்

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்முன்னம் உணர்ந்த வளை.

My bangles betrayed even before I did my lover’s separation from me.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னம‌ே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது,உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

(இதுவும் அது.) தண்ணந்துறைவன் தணந்தமை - குளிர்ந்த துறையை உடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற் பிரிந்தமையை; நம்மினும் வளை முன்னம் உணர்ந்த - அவன் குறிப்பான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளைகள் முன்னே அறிந்தன. (கருத்து நிகழ்ந்ததாகலின், 'தணந்தமை' என்றும், 'யான் தெளிய உணர்தற்கு முன்னே தோள்கள் மெலிந்தன' என்பாள், அதனை வளைமேலேற்றி, அதுதன்னை உணர்வு உடைத்தாக்கியும் கூறினாள்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.

— சாலமன் பாப்பையா