மு.வரதராசன் விளக்கம்
பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.
பரிமேலழகர் விளக்கம்
(தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து.(பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.