குறள் 1278:
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
My loved one left me, was it yesterday? Days seven my pallid body wastes away
அதிகாரம் - 128 - குறிப்பறிவுறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) எம் காதலர் சென்றார் நெருநற்று - எம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனி பசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம். ('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது என்பாள். 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.