குறள் 1218:
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
And when I sleep he holds my form embraced; And when I wake to fill my heart makes haste
அதிகாரம் - 122 - கனவுநிலையுரைத்தல்
மு.வரதராசன் விளக்கம்
தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.
பரிமேலழகர் விளக்கம்
(தான் ஆற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்தாட்கு இயற்பட மொழிந்தது.) துஞ்சுங்கால் தோள் மேலராகி - என் நெஞ்சு விடாது உறைகின்ற காதலர் யான் துஞ்சும் பொழுது வந்து என் தோள் மேலராய்; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தர் ஆவர் - பின் விழிக்கும் பொழுது விரைந்து பழைய நெஞ்சின் கண்ணராவர்.(கலவி விட்டு மறையும் கடுமைபற்றி 'விரைந்து' என்றாள். ஒருகாலும் என்னின் நீங்கி அறியாதாரை நீ நோவற்பாலை யல்லை என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.