மு.வரதராசன் விளக்கம்
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?
பரிமேலழகர் விளக்கம்
(விழித்துழிக் காணளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது.) நனவினான் நல்காக் கொடியார் - ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாத கொடியவர்; கனவின்கண் வந்து எம்மைப் பீழிப்பது என் - நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி? (பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கிக் 'கொடியார்' என்றும் கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின் இல்லது கனவினும் இல்லை' என்பர், 'அது கண்டிலம்', என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?