மு.வரதராசன் விளக்கம்
கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) கனவினான் காதலர்க் காணாதவர் - தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவர் நிற்பர். (இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின்கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.