காமத்துப்பால் · குறள் 1199 / 1330
120. தனிப்படர்மிகுதி

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டுஇசையும் இனிய செவிக்கு.

Though the loved one favours me not, delightful indeed is stray news of him that reaches my ears.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

(இதுவும் அது.) நசைஇயார் நல்கார் எனினும் - என்னால் நச்சப்பட்ட காதலர் என்மாட்டு அன்பிலரேயாயினும்; அவர்மாட்டு இசையும் செவிக்கு இனிய - அவர் திறத்து யாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம்.(இழிவு சிறப்பு உம்மை, 'அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும் அமையும்' என்பதுபட நின்றது. 'அதுவும் பெற்றிலேன்'என்பதாம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.

— சாலமன் பாப்பையா