மு.வரதராசன் விளக்கம்
தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.
பரிமேலழகர் விளக்கம்
(தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது.) வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை. ('காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல்' என்றாள். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர் வாழாநின்றேன் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.