அறத்துப்பால் · குறள் 108 / 1330
11. செய்ந்நன்றி அறிதல்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.

It is not good to forget the benefit received; but it is good to forget then and there the injury done by another.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

நன்றி மறப்பது நன்று அன்று -ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன். (இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்

— சாலமன் பாப்பையா