குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
Effaced straightway is deadliest injury, By thought of one kind act in days gone by
அதிகாரம் - 11 - செய்ந்நன்றி அறிதல்
மு.வரதராசன் விளக்கம்
முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.
பரிமேலழகர் விளக்கம்
கொன்று அன்ன இன்னா செயினும் - தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும் - அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம். (தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.