அறத்துப்பால் · குறள் 107 / 1330
11. செய்ந்நன்றி அறிதல்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.

The good remember with gratitude, all through seven births, the friendship of those who have wiped out their suffering.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்லுவதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் - எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர். ('எழுமை' என்றது வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் (குறள் 62) விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டுபாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது,)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்

— சாலமன் பாப்பையா