குறள் 1028:

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.

Wait for no season, when you would your house uprear; 'Twill perish, if you wait supine, or hold your honour dear
அதிகாரம் - 103 - குடிசெயல்வகை
மு.வரதராசன் விளக்கம்
குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ,பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைந்துவிடும்.
பரிமேலழகர் விளக்கம்
மடி செய்து மானம் கருதக் கெடும் - தம் குடியினை உயரச்செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்துகொண்டு மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம் இல்லை - ஆகலான் அவர்க்குக் கால நியதி இல்லை. (காலத்தை நோக்கி மடி செய்தல் - வெயில் மழை பனி என்பன உடைமை நோக்கிப் 'பின்னர்ச் செய்தும்' என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல் - இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ? என்று உட்கோடல். மேல் 'இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது' (குறள்-481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ?' என்று கருதினும் 'அது கருதற்க' என்று மறுத்தவாறு.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.