மு.வரதராசன் விளக்கம்
தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கிக் கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.
பரிமேலழகர் விளக்கம்
குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு - மூவகைத் துன்பமும் உறற்பாலதாய தன் குடியை அவை உறாமற் காக்க முயல்வானது உடம்பு; இடும்பைக்கே கொள்கலங் கொல் - அம்முயற்சித் துன்பத்திற்கே கொள்கலமாம் அத்துணையோ? அஃது ஒழிந்து இன்பத்திற்கு ஆதல் இல்லையோ? ('உறைப் பெயல் ஒலைபோல, மறைக்குவன் பெரும நிற் குறித்து வருவேலே ' (புறநா.290) என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. 'என்குடி முழுதும் இன்புற்றுயரவே நான் இருமையும் எய்துதலான் இம்மெய் வருத்த மாத்திரம் எனக்கு நன்று' என்று முயலும் அறிவுடையான், அஃதொரு ஞான்றும் ஒழியாமை நோக்கி, 'இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ' என்றார். இது குறிப்பு மொழி. இவை இரண்டு பாட்டானும் அவர் அது செய்யும் இயல்பு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ?