குறள் 1027:
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
The fearless hero bears the brunt amid the warrior throng; Amid his kindred so the burthen rests upon the strong
அதிகாரம் - 103 - குடிசெயல்வகை
மு.வரதராசன் விளக்கம்
போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.
பரிமேலழகர் விளக்கம்
அமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர் மேலதானாற் போல; தமரகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம். (பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.