குறள் 1026:
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
Of virtuous manliness the world accords the praise To him who gives his powers, the house from which he sprang to raise
அதிகாரம் - 103 - குடிசெயல்வகை
மு.வரதராசன் விளக்கம்
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.
பரிமேலழகர் விளக்கம்
ஒருவற்கு நல்லாண்மை என்பது - ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் - தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல். (போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். குடியினையாளுந் தன்மை - குடியிலுள்ளாரை உயரச்செய்து தன் வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.