குறள் 1025:

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

With blameless life who seeks to build his race's fame, The world shall circle him, and kindred claim
அதிகாரம் - 103 - குடிசெயல்வகை
மு.வரதராசன் விளக்கம்
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை - குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு - அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார். (குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.