சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.
“Success comes unbidden to one who exalts one’s family with unremitting toil.”
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் - அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவெய்தும். (குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.