பொருட்பால் · குறள் 1023 / 1330
103. குடிசெயல்வகை

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்றுத் தான்முந் துறும்.

Even God girds up His loins in the service of one who strives for the glory of one’s family.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல்கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

குடி செய்வல் என்னும் ஒருவற்கு - என் குடியினை உயரச் செய்யக் கடவேன் என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்றுத் தான் முந்துறும் - தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும். (முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

— சாலமன் பாப்பையா