மு.வரதராசன் விளக்கம்
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம்புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் - சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார் - ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும் தாம் திரியார். (சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். 'பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ'(புறநா.330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.