பொருட்பால் · குறள் 987 / 1330
99. சான்றாண்மை

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு.

What profits one’s nobility if good is not done even to those who do harm?

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

தமக்குத் தீமை செய்தவருக்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து? (சிறப்பு உம்மை அவர் இன்னாசெய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது. ஓகாரம், அசை. வினா எதிர்மறைப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?

— சாலமன் பாப்பையா