கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
“All virtues dwell in one who is alive to one’s nobility of conduct.”
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர். (சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும் சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.